பொழுதும் சாஞ்சிடுச்சு - கவிதை - கவிஞர் மாயவரம் இதயராஜா

கடன் தொல்லை தாங்காமல்
கணவன் ஓடிவிட 
அவன் மனைவியின் 
தேடல்... 

"பொழுதும் சாஞ்சிடுச்சு "
___________

பள்ளிக்கூடம் போயிபுட்டு
வீடுவந்து சேரயிலே
பொண்ணுபாக்க வந்துயென்ன
பொடவகட்ட வச்சவரே.. 

முடிச்சிக்கு ஒன்னுன்னு
மூனுபுள்ள பெத்துபுட்டு
கருக்கால எங்கையா 
காணாம போனீரு? 

பாசி போலவே
படர்ந்த கதைமறந்து
காசி யாத்திரதான்
கால்நடையா போனீரோ?

பட்டிகாட்டு பொண்ணுயிவ
சளிச்சித்தான் போனானு
பட்டனத்து பொண்ணுதேடி
பல்லிலிச்சி போனீரோ?

ஒண்டிவாழ ஒரு
குடிசை இல்லயின்னு
வீடு வாங்கிவர
வண்டிகட்டி போனீரோ?

பொந்துகட்டி வாழவச்ச
கந்துவட்டிக் காரனுக்கு
கன்னிவெடி வாங்கிவர
காசுமீரு போனீரோ?

கடனெல்லாம் கழிச்சிட்டு
கால்நீட்டி திங்கனுன்னு
காசுமரம் வாங்கிவர
கப்பலேரி போனீரோ?

உள்ளூரு சாமியெல்லாம்
ஊமையாகி போச்சுன்னு
வெளியூரு சாமிகிட்ட
வெவரஞ்சொல்ல போனீரோ?

பொட்ட மாடுகட்டி
ஏரோட்ட முடியலனு
எமராசங்கிட்ட தான்
எருமவாங்க போனீரோ?

பொழுதும் சாஞ்சிடுச்சி
போனவர காணலயே..
பதறி நிக்கிரன்னு
பாத்தா சொல்லுங்களேன்...!!!

    
    மாயவரம் இதயராஜா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்