யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்
யாரடி நீ?
__________________
யாரடி நீ...?
ஒரே பார்வையில்
உன்னைப்பற்றியே
யோசிக்க வைக்கிறாய்...
உயிரைக் கயிராக்கி
ஊஞ்சல்கட்டி
விளையாடுகிறாய்...
காதல் தீயை
பற்றவைத்துவிட்டு
கடைக்கண்களால்
என்னை
கடைந்தெடுக்கிறாய்...
யாரடி நீ!
•
தீவத்திலகையாய் வந்தென்னை
காதல் தீவிற்குள் விட்டுச்செல்கிறாய்..
வாச்சாயனாரின் வார்த்தைகளைத்
தேடிப் புரட்டச் செய்கிறாய்..
வள்ளுவனின்
காமத்துப்பாலுக்கு மட்டும்
விளக்கம் கேட்டு
அலையச் செய்கிறாய்...
யாரடி நீ?
•
ஒரு சொட்டுப்
புன்னகையை வீசி
என் உயிரையே
உடைத்துப் போடுகிறாய்...
ஒரே ஒரு வார்த்தைக்காக
என் வாழ்க்கையையே
உன்னிடம்
யாசிக்கச் செய்கிறாய்...
விடியலை விரட்டியடித்து
என்
நீண்ட கனவுகளுக்குள்
எதிர்காலக் கதையளக்கிறாய்..
யாரடி நீ?
•
என் இதயத்திற்கு
இறகுகளைப் படைத்து
உன்னைச் சுற்றியே
பறக்கச் செய்கிறாய்...
என் பகலையும்
இரவையும் சுருக்கி
ஒரு கைப்பேசிக்குள்
அடைத்துச் செல்கிறாய்...
என் இலச்சிய மரத்தை
பிடுங்கி வீசிவிட்டு
அங்கு
காதல்ச் செடியை
நட்டுச் செல்கிறாய்...
யாரடி நீ?
•
யாரும் பார்க்காத
இடம்சென்று
தனிமையில் அழவைக்கிறாய்..
நாத்திகவாதியான என்னை
காதல் வரம் வேண்டி
கடவுளைத்
தொழ வைக்கிறாய்...
கண்ணாடி முன் நின்று
காதல் சொல்லி
பழகச் செய்கிறாய்...
யாரடி நீ?
•
க ங ச வே
எழுதத்தெரியாத என்னை
காதல் கவிதைகள்
எழுதச்செய்கிறாய்...
பசி தூக்கம் மறப்பதற்கு
காதல் என்ற
மூன்றெழுத்து
மந்திரம் உபதேசிக்கிறாய்...
சொல்
யாரடி நீ?
எனக்கென பிறந்திருக்கும்
இன்னொரு இதயமா...?
கவிஞர்
மாயவரம் இதயராஜா
மேலப்பெரும்பள்ளம்.