ஏமாற்றத் தழும்பு | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்
கனவென்னும் சோலையிலே
நீ வருவாய் என்றென்னி
உன் வரவைப் பார்த்திருந்தேன்..
பூ வாங்கி காத்திருந்தேன்!
உனக்காக வாங்கி வந்த
பூவனைத்தும் வாடும்முன்னே
எனைப்பார்த்து மகிழ்கின்ற--உன்
புன்னகை ஏன் வாடியதோ?
குறிஞ்சி மலர் பூப்பதற்கு
பன்னிரண்டு ஆண்டெதற்கு?
உன்மூச்சுக் காற்றுப்பட்டால்
ஒரு நொடியில் பூத்துவிடும்!
அப்படிப்பட்ட உன்மூச்சு
அனல்காற்றாய் வீசுவதா?
கோபத்தீ அனலினிலே
என்மனது கருக்காதா?
உள்ளத்தை கொடுத்த என்னை
உதாசினப் படுத்துகிறாய்!
நீ இருந்த மாளிகையில்
தீ வைத்து கொளுத்துகிறாய்!
துன்பத்தின் முதல் எழுத்து
இ ஆக மாறும் முன்னே
நீ மாறிச் சென்றாய்!-துன்பம்
நிலையாகிப் போச்சுதடி!!
மோகனச் சிரிப்பாலே
என் மனதைக் கவர்ந்தவளே
முல்லைக் கொடியாய் என்
உடலெங்கும் படர்ந்தவளே..-இன்று
சாதித்த மகிழ்ச்சியிலே
நீ கடந்து செல்கிறாய்!-உன்
பித்தலாம் தெரிந்தவுடன் நான்
பித்தனாகிப் போகின்றேன்!!
கண்காட்டி வித்தையெல்லாம்
காதலிலே காட்டிவிட்டு
கண்மூடித் தனமாக
கடந்து நீ செல்கிறாய்..
ஈட்டி முனை பட்டாலும்
வலிக்காத என் மனதில்-உன்
ஏமாற்றத் தழும்பதுவோ
ஏற்படுத்தும் வலி அதிகம்!!!