news 18 வெளியிட்ட என்னை பற்றிய கட்டுரை - மாயவரம் இதயராஜா

இதயராஜா
நான் ‘ஏழை’ என்று எழுதும் போதெல்லாம் அது நான் ஒரு சமூகத்தின் சார்பாக எழுதுவதாக புரிந்துகொள்ளப்படுகிறது
NEWS18 TAMIL
LAST UPDATED:
காதலை, ஹைக்கூ முதல் முழு நீளப் பாடல்கள் வரை பல மெட்டுக்களில் பல வடிவங்களில் பேஸ்புக் உலகில் கொஞ்சு தமிழ் கொண்டு அள்ளித்தெளிப்பவர் தான் இந்த மாயவரம் இதயராஜா.
மயிலாடுதுறையில் உள்ள மேலப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்தவர் இந்த இதயராஜா(33). எம்.ஏ, எம்.பில், எம்.எட் வரை படித்துள்ள இவர் சின்ன வயதிலிருந்தே கவிதைகள் எழுதுவது, பாடல்கள் பாடுவது, சொந்தநடையில் எழுதுவது என்னும் போக்கிலேயே தன்னை வளர்த்துக்கொண்டதாகச் சொல்கிறார். ஒரு கிராமியப் பாடகராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் பல ஊர்த் திருவிழாக்களிலும் கலந்துகொள்கிறார்.
இவரது ‘கவிக்கொம்பன்’ ‘மாயவரம் இதயராஜா’ பேஸ்புக் ஐடிக்களை பின் தொடர்பவர்கள் ஐயாயிரம் பேருக்கும் மேல் இருக்கிறார்கள். ‘நச்’ என்று ஒரு காதல் கவிதை உடன் ஒரு அழகியின் போட்டோ இப்படித்தான் இருக்கும் இவரது பதிவுகள்.
அதென்ன உங்களுக்கு காதல் பாடல்கள் மேல் இத்தனை ஈர்ப்பு? என்றதற்கு “என் திருமணம் காதல் திருமணம். பத்து வருடம் காதலித்தேன். பூம்புகார் கலைக்கல்லூரியில் நான் படித்த காலகட்டத்தில் என் காலேஜை கட் அடித்து விட்டு என் மனைவி நிரோஷா-அப்போதைய காதலி அவளின் டி.பி.எம்.எல். கல்லூரிக்கு சென்றுவிடுவேன். அவளுக்காக நாள் முழுவதும் காத்திருப்பேன். காத்திருக்கும் வேளையில் அவளுக்காக மெட்டமைத்து கவிதை, பாட்டு எழுதி வைப்பேன். அப்படித் தான் தொடங்கியது தான் என் காதல் கவிதைகள்.
இதயராஜாவுக்கு தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. படிப்புக்கேற்ற வேலை ஏதும் கிடைக்காமல் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்தே உள்ளார். கொரானாவுக்கு முந்தய காலத்தில், ஒரு சின்ன உணவகம் ஒன்றை வைத்து அதன்மூலம் குடும்பச் சூழலை உயர்த்த முனைந்தார். ஆனால் கொரோனா கால ஊரடங்கு அதனை முடக்கி அவரின் சூழலை இன்னும் பின்னுக்குத் தள்ளியது என்கிறார்.
ஏன் நீங்கள் சமூகம் சார்ந்து, பிரச்னைகளை பற்றி எல்லாம் எழுதுவதில்லை என்று கேட்டதற்கு. “எனது வெளிவந்த புத்தக தலைப்புகளே, ‘ஈரத்துணி மற்றும் உழவனின் எதிர்பார்ப்புகள்’ சமூக நலன் சார்ந்து, விவசாயப் பிரச்சனை சார்ந்து தான் எழுதத் தொடங்கினேன், ஆனால் நம் சமூகத்தில் ஆழ்ந்திருக்கும் சாதிய கண்ணோட்டமானது, நான் ‘ஏழை’ என்று எழுதும் போதெல்லாம் அது நான் ஒரு சமூகத்தின் சார்பாக எழுதுவதாக புரிந்துகொள்கிறது.”என்றார்.
தன் லட்சியமாக, அவர் எதை வைத்திருக்கிறார் என்று கேட்கையில், கலைத்துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும், தன்னிடம் இருக்கும் திறமைகளை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே என்கிறார் காதல் கவிஞர் மாயவரம் இதயராஜா.
- இனிய நந்தன்