மலர்களின் போராட்டம்-கவிதை - மாயவரம் இதயராஜா

மலர்களின் போராட்டம்
__________________________


மல்லிகைப் பூக்களின்
மௌன ஊர்வலம்..

முல்லைப் பூக்களின்
முனுமுனுப்புச் சத்தங்கள்..

ரோஜா பூக்களின்
கொடியேந்திய போராட்டம்..

சாலைகளை முற்றுகையிட்டு
நீதிக் கேட்டு கூச்சலிடும்
கனகாமரப் பூக்களின் பிடிவாதம்..

சாமந்திப் பூக்களின் 
அவசரக் கூட்டத்தில் எழுந்த 
சர்ச்சைக்குறிய விவாதம்...

தீக்குளிக்க முற்படும்
அடுக்கு மல்லிகளின்
அதிரடி முடிவு..

அழுது புலம்பும்
டிசம்பர் பூக்கள்...

தீர்வு கிடைக்காவிட்டால்
நாடு தழுவிய போராட்டம்
நடத்தப் போவதாய்
மற்ற மலர்கள் விடுக்கும் 
எச்சரிக்கை..

மலர மறுக்கும் மொட்டுகள்..

மணம்வீச மறுக்கும் மலர்கள்..

உணவு தட்டுப்பாட்டில் 
வண்டினம்...

பூவலங்காரமில்லா 
பூவையர் கூந்தல்.. 

இவை அனைத்திற்கும் காரணம்
யார் தெரியுமா?

இனியவளே..
நீ தான்..
நீயே தான்..!

கண்ணெதிரே கனகாம்பரம்
பூத்திருக்க 
நீ ஏன் 
காகிதப் பூவைச் சூடுகிறாய்...?

இந்த மாமன் வீட்டு 
தோட்டம் முழுவதும்
மல்லிகைகள் மலர்ந்திருக்க
நீ ஏன் 
மணமில்லாப் பூவைத் தேடுகிறாய்?

இனியவளே...
மலர்களின் போராட்டம் 
முடிவுக்கு வரட்டும்

எடுத்து கீழே வீசிவிடு
உன் கூந்தலில் 
நீ சூடியிருக்கும் காகித மலர்களை..!

வீசிவிட்டு வா!

இந்த மாமன் வீட்டுக்கு வா!

உன் ஆசை தீர 
எவளவு வேண்டுமானாலும் பறி!

நுகர்ந்து பார்!

மூச்சு கொடு!

நெஞ்சோடு அள்ளி அனைத்துகொள்!

உனக்கு மட்டும் தடையில்லை..

அது
மல்லிகையாக இருந்தாலும் சரி!

இந்த 
மாமனாக இருந்தாலும் சரி!


மாயவரம் இதயராஜா 
 (2006)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்